Wednesday, September 26, 2012

நான் மற்றும் மேலும் சில!

பல நாள் கழித்து நான் 'நான்' படம் பார்த்தேன் (எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம்!!!). "Naan" என்று கூகிள் இமேஜ் சர்ச் செய்ததில் இந்தப் படம்தான் கிடைத்தது - ஹி ஹி ஹி! :) வழக்கமான கோலிவுட் பாணியில் இருந்து விடுபட்டு மாறுதலான கதைக்களனுடன் வந்திருக்கும் படம். குறைகள் கண்கூடாக உறுத்தினாலும், படம் சுவாரசியமாக இருந்தது! வாழ்க்கையைத் தொலைத்த ஒருவன், இறந்து போன எவனோ ஒருவனின் அடையாளத்தை திருடி புதிதாய் வாழ நினைப்பதுதான் படத்தின் கான்செப்ட். நல்ல வேளையாக நாம் பார்த்து சலித்த ஆள் மாறாட்ட காமெடிப்(!) படங்களைப் போலில்லாமல், கொஞ்சம் கிரைமும் கொஞ்சம் த்ரில்லும் தடவிய சாண்ட்விச்சாய் வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி அமைதியாக நடித்துள்ளார் - இந்தப் படத்திற்கு தேவையான நடிப்பு இவ்வளவுதான் (அந்த அழுகைக் காட்சியைத் தவிர). ஆனாலும், அவரது உண்மையான நடிப்புத் திறமை இனி வரும்(?) படங்களில்தான் தெரியும்! சித்தார்த் கவர்கிறார், மக்காயல பாட்டு கலக்கல் - சித்தார்த் ஓஓ என கண்களையும், உதடுகளையும் குவித்து பாடுவது நல்ல காமெடி. அவருக்கு போட்டியாக ரூபா மஞ்சரியின் டேன்ஸ் ஸ்டெப்புகள் செம காமெடி. இவை போதாதென்று, படத்தில் காமெடி இல்லாத குறையை அந்த போலிஸ் ஆஃபிஸர் தீர்த்து வைக்கிறார் - இவ்வளவு மொக்கையாக புலன் விசாரணை செய்யும் போலீஸை இது வரை பார்த்ததில்லை. குறைகள் பல இருந்தாலும், நான் - நல்ல டைம் பாஸ்!

'நான் ஈ' தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் மீது வழக்கு தொடராதது ஆச்சரியம்தான். 'ஆனந்த தாண்டவம்' படத்தின் தயாரிப்பாளர்கள் தாண்டவம் தலைப்பின் மீது இன்னமும் வழக்கு போடாதது அதை விட ஆச்சரியம்! :) வெளிவராத இரண்டு படங்கள் ஒரே மாதிரியான தலைப்புகளைக் கொண்டிருந்தால்தான் இந்த பிரச்சினையோ?! ;)

கிழடு தட்டியிருந்தாலும் விக்ரமின் தாண்டவம் பட ஸ்டில்கள் (சில) அசத்தலாக உள்ளன. ஆனாலும் தமிழ் சினிமா ஸ்டில்களையும், போஸ்டர்களையும், டிரைலர்களையும் கொஞ்சமும் நம்ப முடியாது! இது போன்ற ஸ்டைலான புரமோஷன்களை நம்பி படம் பார்க்கப் போனால் - ஏதாவது ஒரு பாடல் காட்சியில் அந்த பில்ட்-அப்புகள் சில நொடிகளில் தோன்றி மறையும்!

அப்புறம் Expendables 2 படம் பார்த்தேன், இரைச்சலான படம். இருந்தாலும் "Rest In Pieces " என்ற அந்த ஒரு டயலாகுக்காகவே பார்க்கலாம்! :) வான் டம்மா அது? ஹ்ம்ம்... காலத்தின் கோலம்!!!

இப்போது புதியதாய் வரும் தரமான தமிழ் காமிக்ஸ்கள் புத்தகங்கள் ஒவ்வொன்றும் என்னுடைய ஒரு சில நாட்களை விழுங்கி விடுகின்றன - படிப்பதையும், பதிவிடுவதையும் சேர்த்து! அப்படி என்ன பெரிதாக அதில் இருக்கப்போகிறது என நினைப்பவர்கள் இதைப் படியுங்கள்!:
வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - முத்து காமிக்ஸ் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்!

Thursday, September 13, 2012

தமிழ்மணம் Certified!

மினி ப்ளேடை தொடர்வதும், தொடராததும் தமிழ்மணத்தின் கையில் இருப்பதாக இந்த ப்ளேட்பீடியா பதிவில் தெரிவித்திருந்தேன்! இன்று kuttiblade.com தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்தது - அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இனி போஸ்ட் கார்டு பதிவுகள் தொடரும், ஜாக்கிரதை! :) இந்தப் பதிவில் எழுத பெரிதாய் மேட்டர் இல்லாததால் ஒரு சிறிய (சுய)பரிந்துரை மட்டும்! எனது மற்ற தளமான ப்ளேட்பீடியாவில், பெங்களூரில் சென்ற வார இறுதியில் நடைபெற்ற காமிக் கான் கண்காட்சி குறித்த சிறப்பு பதிவுத் தொகுப்பினை இங்கே காணலாம்! உங்களுக்கு காமிக்ஸ் பிடிக்குமோ இல்லையோ, இந்தப் பதிவுகளைப் படித்தால் பல சுவாரசியத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்! ;) 
  1. காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 கண்காட்சி, பெங்களூர் - ஒரு அறிமுகம்!
  2. சிங்கத்தின் சிறு குகையில் - ப்ளேட்பீடியா @ காமிக் கான் பெங்களூர்! - பகுதி 1
  3. பெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு!
  4. பெங்களூரில் ஒரு தமிழ் புத்தக வெளியீட்டு விழா!
  5. நான் எடுத்த முதல் கத்துக்குட்டி வீடியோ பேட்டியும், மிஷ்கினின் போட்டோவும்!
  6. காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 - நிறைவுப் பதிவு - ஒரு இனிய அனுபவம்!

Friday, September 7, 2012

CFL-ஆ, டியூப் லைட்டா?!

CFL-தான் சிறந்தது என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், ஹாலிலோ அல்லது பெரிய அறைகளிலோ CFL பல்புக்களை மாட்டினால் தூங்கி வழிகிறது! என்னதான் 20W அல்லது 30W CFL வாங்கிப் போட்டாலும், ஒரு சாதாரண டியூப் லைட்டின் வெளிச்சத்தை அடித்துக்கொள்ள முடியாது! 9W CFL பல்ப்பின் வெளிச்சம், 40W குண்டு பல்ப்பின் வெளிச்சத்துக்கு ஒப்பானது என்று வாங்கும்போது நமக்கு பல்பு கொடுக்கிறார்கள்! :D ஆனால், அதுவோ ஒப்புக்குத்தான் வெளிச்சம் தருகிறது. பால்கனி, சிறிய அறை, குளியலறை, கழிவறை இவற்றிற்கு மட்டும்தான் இவை உகந்தது என்று நினைக்கிறேன்! 5W மஞ்சள் நிற CFL-ஐ படுக்கையறையில் போட்டால், அந்த மந்த வெளிச்சத்தில் உடனே தூக்கம் வந்து விடுகிறது! :D வீட்டில் எல்லா அறைகளிலும் CFL இருக்கிறது - மந்தகாசமான மாலை வேளைகளிலும், அதிக நேரம் TV பார்க்கும் போதும் மட்டுமே அவை உபயோகமாகின்றன! மற்ற சமயங்களுக்கு, சாதாரண டியூப் லைட் 36W என்பதால் அதற்கு பதிலாக 28W ஸ்லிம் லைன் டியூப் லைட் செட்களை மாட்டி இருக்கிறேன்! சான்சே இல்லை, ஒளிமயமான வாழ்வுதான்! :) மூன்று வருடங்களில் ஒரு தடவை கூட ஃப்யூஸ் ஆனது கிடையாது! :)

இன்னும் சில வருடங்களில் LED லைட்டுகள், CFL-இன் இடத்தை கைப்பற்றி விடும்! ஆனால் டியூப் லைட்டுகளின் எதிர்காலம் இன்னமும் பிரகாசமாகவே உள்ளது என்று நினைக்கிறேன்! :)

Thursday, September 6, 2012

பெங்களூரில் காமிக்ஸ் திருவிழா - Comic Con Express 2012!

பெங்களூரில் இம்மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதி (சனி, ஞாயிறு) - Comic Con Express 2012 கண்காட்சி நடைபெறவிருக்கிறது! காமிக்ஸ் இரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்! மற்றவர்களும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம்! மதிய உணவை அருகில் உள்ள ஓட்டல்களில் சொந்த செலவில் சாப்பிட்டுக் கொள்ளலாம்! ;) காமிக்ஸ் தவிர்த்து வீடியோ கேம்கள், அனிமேஷன் மற்றும் சினிமா சார்ந்த ஸ்டால்களும் இருக்கும் என தெரிகிறது! மேலதிகத் தகவல்களுக்கு இங்கே செல்லவும்! தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று காமிக்ஸ் வெளியிட்டுக் கொண்டிருக்கும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் ஸ்டாலும் இவ்விழாவில் இடம் பெறப் போகிறது! லயன் காமிக்ஸின் அடுத்த வெளியீடான Wild West ஸ்பெஷல் இவ்விழாவில் வெளியிடப்படுகிறது என்பது கூடுதல் தகவல் - கௌபாய் (காமிக்ஸ் / சினிமா) இரசிகர்கள் கவனத்திற்கு! பெங்களூரில் வசிக்கும் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள்(!), தமிழ் காமிக்ஸ் இதழ்களை வாங்க இது அருமையான வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

இது குறித்த லயன் காமிக்ஸ் எடிட்டர் விஜயனின் சிறப்புப் பதிவை இங்கே பார்க்கலாம்!: மேற்கே ஒரு பயணம்!

Wednesday, August 29, 2012

புது டம்ளரில் குடிக்க மாட்டேன்!

புதிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில், அவற்றை தயாரித்த அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருப்பதை கவனித்திருப்பீர்கள்! அந்த ஸ்டிக்கரை பிரிக்க முயற்சி செய்திருக்கிறீர்களா?! துணிகளில் இருக்கும் கிரீஸ் கரையை கூட நீக்கி விடலாம் ஆனால் இந்த ஸ்டிக்கரை முழுதாக நீக்க முடியாது! நகத்தை கொண்டு உரித்தால் ஸ்டிக்கரின் மேற்பகுதி மட்டும் தனியாக பிரியும், பிறகு வெண்மையான ஸ்டிக்கரின் அடிப்பகுதி தெரியும்! அப்படி எதைக் கொண்டுதான் ஒட்டுவார்களோ தெரியவில்லை, கொலைவெறியோடு சுரண்டினாலும் ஆங்காங்கே பசையும், அரைகுறையாய் கிழிந்த ஸ்டிக்கரும் நமக்கு பெப்பே காட்டும்! சோப்புத் தண்ணீரில் ஊற வைத்தாலும் வராது! பசையின் வீரியத்தைப் பொறுத்து ஸ்டிக்கர் முழுவதுமாய் பிரிய சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ ஆகலாம்!!! இதற்காகவே புது டம்ளரில் குடிக்க (குடிநீர் அல்லது காஃபிதான்!) விரும்புவதில்லை. பிசுக் பிசுக் என்று விரல்களில் பசை ஒட்டினாலே எரிச்சலாக இருக்கும், இதே காரணத்திற்காக புதுத் தட்டிலும் சாப்பிடுவதில்லை! :)

அன்புள்ள பாத்திர தயாரிப்பாளர்களே, வியாபாரிகளே பாத்திரங்கள் உங்கள் நிறுவனத்தில்தான் வாங்கப்பட்டது என்ற பேருண்மை, நாங்கள் அதை வாங்கும் போதே எங்களுக்கு தெரியும்! எப்போதாவது எட்டிப் பார்க்கும் விருந்தாளிகளுக்கு இந்த பாத்திரங்களின் வடிவமைப்பு பிடித்திருந்தால் 'எந்த கடையில வாங்கினீங்க, நல்லா இருக்கே!' என்று எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்! எனவே, தயவு செய்து பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டாமல் அல்லது எளிதில் பிரியகூடிய வகை ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்டி விற்றால் அவை எங்கள் கைகளில் ஒட்டாமல் இருக்கும்!